விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நீர்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
இயற்கை சாயங்கள்
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கண்டறிப்பட்ட நீர்நிலைகள் தாமரைகுளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமாசெட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேணடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவடட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், வினோத்குமார், தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், இந்து அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.