விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

Update: 2023-09-13 17:10 GMT

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

முன்னேற்பாடு பணிகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் இந்து அமைப்பினர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களை அணுகியும், அல்லது வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் சார் கலெக்டரிடம் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாக ஆட்சேபனை சான்றிதழுடன் பெறப்பட்ட படிவத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

தற்காலிக கட்டமைப்புகள் தீ பாதுகாப்பு தரத்தை கடைபிடிக்கும் வகையில் தீ மற்றும் மீட்பு சேவைகள் இருக்க வேண்டும்.

இயற்கை சாயங்கள்

அதேபோல் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர்கள் மந்தாகினி, தனலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்