நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சென்னை,
மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு நேற்று தடை விதித்தது. உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும், தடையை மீறி பஞ்சு மிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை என்றும் தெரிவித்தார்.
நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நிறம் கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.