'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

‘நீட்’ தேர்வில் 12 ஆயிரத்து 840 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 35 ஆகும்.

Update: 2022-09-12 23:43 GMT

சென்னை,

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியானது. நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில், 56.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் எழுதியதில், 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இது கடந்த ஆண்டுகளை விட குறைவான தேர்ச்சி சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் எழுதினார்கள்? என்ற விவரங்கள் வெளியிடப்படாமலேயே இருந்தன. இந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் புள்ளி விவரங்கள் நேற்று வெளியாகின.

35 சதவீதம் பேர் தேர்ச்சி

அதன்படி, நீட் தேர்வை எழுத 17 ஆயிரத்து 972 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் 12 ஆயிரத்து 840 பேர் தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இது 35 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த சில ஆண்டுகளுடனான தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் முறையே, 22.06 சதவீதம், 13.46 சதவீதம், 25.83 சதவீதம், 24.27 சதவீதம் ஆகும்.

இந்த ஆண்டு தேர்ச்சியில், விழுப்புரம், விருதுநகர், சேலம், நீலகிரி, பெரம்பலூர், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த மாவட்டங்களில் 100 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 172 பேர் எழுதியதில் 104 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மற்ற பெரும்பாலான மாவட்டங்களில், 20 முதல் 25 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்