டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்க வாய்ப்பு

டெல்டா பாசன ேதவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Update: 2023-10-04 00:19 GMT

மேட்டூர்,

தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது.

எனவே அணைகளுக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. இதனால் காவிரி நீரை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 4 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். குடிநீர் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்க அணையில் குறைந்தது 6 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். தற்போது அணையில் நேற்றைய(3-ந்தேதி) நிலவரப்படி 9.83 டி.எம்.சி. அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. குடிநீர், மீன்வளத்தை பாதுகாக்க இருப்பு வைக்க வேண்டிய தண்ணீர் போக மீதம் 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே அணையில் உள்ளது.

நேற்று அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரத்தானது வினாடிக்கு 1,560 கனஅடியாக உள்ளது. தண்ணீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், இன்னும் 3 நாட்கள் மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.38 அடியாக இருந்தது.

90 ஆண்டு கால வரலாற்றில்...

மேட்டூர் அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இதுபோன்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கர்நாடக அரசிடம் இருந்து வழக்கமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் டெல்டா பாசன விவசாயிகளும், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் பெறும் பொதுமக்களும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா? என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்