ஊராட்சி ஒன்றியங்கள், கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கலெக்டர் தகவல்

ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் இணையதள சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-09 18:45 GMT

சிவகங்கை

ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் இணையதள சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இணையதள சேவை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 445 கிராம ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (டான்பிநெட்) நிறுவனம் பாரத்நெட் திட்டம் பகுதி 2 மூலம் இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2 மாதங்களில் முழுமையாக நிறைவடையும். இணையதள வசதிக்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் தரை வழியாகவும், மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள அறை ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும்

அதேபோல் இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதிசெய்திடும் வகையிலும் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இணையதள வசதி பெறப்படும்.

தமிழ்நாடு அரசு இணையதள சேவைகளை ஊரகப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஊராட்சியிலேயே முழுமையாக பெற இயலும். ஒவ்வொரு ஊராட்சியிலும் டான்பிநெட் உபகரணங்கள் (மின்கலன், இன்வெர்ட்டர் ரூட்டர் மற்றும் கண்ணாடி இழை) தமிழ்நாடு அரசின் உடைமையாகும். இவைகளை சேதப்படுத்தும் அல்லது களவாடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்