கள்ளிமந்தையம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்

கள்ளிமந்தையம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-14 21:00 GMT

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம், இடையக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் கிணற்று பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் சொட்டுநீர் பாசனத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து காணப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு காரணமாகவும், வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கள்ளிமந்தையம், இடையக்கோட்டை பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கடந்த வைகாசி மாத தொடக்கத்தில் விவசாயிகள் பலரும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அவை விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் சில இடங்களில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் காற்றால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது சின்ன வெங்காயத்துக்கு மார்க்கெட்டுகளில் நல்ல விலை கிடைப்பதால், லாபத்துடன் வருமானம் வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதன்படி, சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்