சின்னவெங்காயம் அறுவடை தொடங்கியது

தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியது.

Update: 2023-08-22 19:30 GMT
தொண்டாமுத்தூர்


தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியது.


சின்னவெங்காயம் சாகுபடி


கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள காளம்பாளையம், தீத்திபாளையம், குப்பேபாளையம், கரடிமடை, போளுவாம்பட்டி, செம்மேடு, நரசீபுரம், மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய லேசான மழை சாரல் இருக்க வேண்டும்.


இந்த பகுதியில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. ஆனாலும் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து ஜூன் மாத இறுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர்.


அறுவடை தீவிரம்


ஆனால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் இந்த பகுதியில் சின்னவெங்காயம் சாகுபடி செய்வது மிகவும் குறைந்தது.


இங்கு வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு 7 ஆயிரம் ஏக்கரில்தான் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அவை அறுவடைக்கு தயாரானது. எனவே சின்னவெங்காயம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.


இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-


விளைச்சல் குறைவு


சின்ன வெங்காயத்துக்கு பொதுவாக 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். இந்த ஆண்டில் வெப்பக்காற்று அதிகமாக இருந்ததால் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடும் நிலை ஏற்பட்டது. சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.


தற்போது சின்னவெங்காயம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஏக்கருக்கு 7 டன் வரை விளைச்சல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் அதிகபட்சமாக 4 டன் விளைச்சல் தான் கிடைத்தது.


பட்டறையில் இருப்பு


தற்போது விவசாயிகளிடம் இருந்து சின்னவெங்காயத்தை கிலோ ரூ.30 முதல் 40 வரை வாங்குகிறார்கள். பொதுவாக அறுவடை செய்ததும் சின்ன வெங்காயத்தின் வேர் மற்றும் மேலே இருக்கும் தளையைவெட்ட கிலோவுக்கு ரூ.12 வரை செலவு ஆகிறது.


எனவே மேல் பகுதியில் இருக்கும் தளையை மட்டும் கிள்ளிவிட்டு சின்னவெங்காயத்தை பட்டறையில் வைத்தால் 20 நாட்கள் கழித்து வேர் தானாகவே விழுந்து விடும்.


அதன்பிறகு கட்டுபடியான விலை கிடைத்தால் சின்ன வெங்கா யத்தை விற்பனை செய்வோம். இல்லை என்றால் பட்டறையில் 3 மாதம் வரை இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும் போது விற்பனை செய்வோம்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


மேலும் செய்திகள்