நாகர்கோவில்-நெல்லைக்கு ஒன் டூ ஒன் பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கம்; பற்றாக்குறையால் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ஒன் டூ ஒன் பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது. கண்டக்டர்கள் பற்றாக்குறையால் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ஒன் டூ ஒன் பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது. கண்டக்டர்கள் பற்றாக்குறையால் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஒன் டூ ஒன் பஸ்கள்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் மண்டலம் சார்பில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கும் ஒன் டூ ஒன் பஸ்கள் (முன்பு என்ட் டூ என்ட் என இயக்கப்பட்டது) இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 20 பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களை முதலில் இயக்க தொடங்கும் போது கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட்டது. இடையில் எந்த நிறுத்தத்திலும் இந்த பஸ்கள் நிற்காது என்பதால் இவற்றில் பயணிக்கும் பயணிகளுக்கு நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் கண்டக்டர்கள் பயணச் சீட்டு வழங்கினர். பின்னர் இந்த பஸ்களில் கண்டக்டர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு பஸ்சிலும் நாள் ஒன்றுக்கு ஷிப்ட் முறையில் 2 கண்டக்டர்கள், 2 டிரைவர்கள் என 20 பஸ்களுக்கும் 40 டிரைவர்கள், 40 கண்டக்டர்கள் பணியாற்றினர்.
கண்டக்டர் இல்லாமல் இயக்கம்
இந்தநிலையில் அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்தில் கண்டக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 1-ந் தேதியான நேற்று முதல் ஒன் டூ ஒன் பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன.
இதனால் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் 4 கண்டக்டர்களும், நெல்லை பஸ் நிலையத்தில் 4 கண்டக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பஸ் புறப்படுவதற்கு முன்பாக பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாமதமாக இயக்குவதாக குற்றச்சாட்டு
கண்டக்டர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தபோது ஒன் டூ ஒன் பஸ்கள் காவல் கிணறு பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வார்கள். ஆனால் நேற்று முதல் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டதால் காவல்கிணறில் இந்த பஸ்கள் நிற்காமல் சென்றன. இதனால் இந்த பஸ்களுக்காக காவல்கிணறில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பயணிகளுக்கு டிக்கெட் முழுவதும் கொடுத்த பிறகு தான் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் தாமதமாக பஸ் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
200 பணியிடங்கள் காலி
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்தில் சமீப காலமாக டிரைவர்- கண்டக்டர்கள் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த சில மாதங்களில் ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இதனால் டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் டிரைவர்களைக் காட்டிலும், கண்டக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குமரி மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் 200-க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தான் ஒன் டூ ஒன் பஸ்களில் கண்டக்டர்கள் இல்லாமல் இன்று (அதாவது நேற்று) முதல் இயக்கப்படுகிறது என்றார்.