37 மாவட்டங்களில் ஆயிரம் புதிய வகுப்பறைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் 37 மாவட்டங்களில் ஆயிரம் புதிய வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2023-09-26 20:48 GMT

சென்னை,

அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும், 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தொடர்பு மையங்களில், மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர். தமிழ் மொழியின் அடிப்படைகளையும் முறையான கற்பித்தல் பயிற்சியையும் இவர்களுக்கு வழங்கினால் தமிழ் மொழிக் கற்பித்தலை இன்னும் மேம்படுத்த முடியும் என பல அயலகத் தமிழ்ச்சங்கங்களும், பள்ளிகளும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாக தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.

குறிப்பேடு வெளியீடு

இந்த பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க 12.1.2023 அன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்த கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பை (http://tva.reg.payil.app/) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

மேலும், இப்பட்டயப் பயிற்சி குறித்த குறிப்பேட்டை முதல்-அமைச்சர் வெளியிட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.

மேலும், எல்காட் நிறுவனத்திற்கும், அரசுத் துறைகளுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற பங்குதாரர்களுக்கும் இடையே வெளிப்படையான, விரைவான மற்றும் திறமையான முறையில் சேவைகளை வழங்குவதற்கு தானியங்கு நெறிப்படுத்தப்பட்ட தொடர்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த இணையதளத்தை (https://erp.elcot.in/) முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

6 ஆயிரம் வகுப்பறை

கல்விக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு வரலாற்று முன்னெடுப்புகளை நிறைவேற்றி வருவதன் தொடர்ச்சியாக, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டம் "குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்று ஊரகப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் 1.2.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, 8 மாத காலத்தில் முதற்கட்டமாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் புதிய வகுப்பறைகளை முதல்-அமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் திறந்துவைத்தார்.

ஊராட்சி கணக்கு இணையதளம்

கிராம ஊராட்சிகள் தற்போது ஊராட்சியின் பொதுநிதி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், அரசின் திட்டப்பணிகள் போன்ற பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள 11 வகையான கணக்குகளை பராமரித்து வருவது கடினமான செயலாக உள்ளது. அதை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சி கணக்குகள் திட்டத்தை உருவாக்கி, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையை இந்தியன் வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்குகள் திட்டத்தின் TNPASS என்ற புதிய இணையதளத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இணையவழியில் வரிசெலுத்த புதிய வசதி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் 2022-23-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள https://vptax.tnrd.tn.gov.in/ என்ற வரி செலுத்தும் முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம், ரொக்க அட்டைகள், கடன் அட்டைகள், யுபிஐ கட்டணம் மூலம் செலுத்த முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்