அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயன் தருமா?

Update: 2022-12-14 18:45 GMT

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது.

12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள்.

அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டுப் பாதையை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டதுதான், முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களைத் தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள்.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. குறிப்பாக பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்...

அதன்படி, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார்.

குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்தப் பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

மாற்றம் தேவை

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி:- பாடத்திட்டங்கள் மாற்றம் தேவைதான். அதற்கு முன்பு அதை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு கொண்டே வருகிறது. எனவே அதற்குத் தேவையான ஆய்வகங்கள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செய்துகொடுக்க வேண்டும். தமிழக அரசு பாடத்திட்டங்களை மாற்றுவதற்கு முன்பாக பல்வேறு கல்வி வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறது. உதாரணமாக 'நான் முதல்வன்' திட்டம் போன்றவை வரவேற்கத்தக்க ஒன்று. பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றங்கள் இல்லாமல், அடிமட்ட அளவில் இருந்து மாற்றங்கள் கொண்டு வந்து, தற்போதைய மேம்பாடுகளுக்கு ஏற்றவாறு உருவாக்கலாம். மாணவர்கள் படிக்கும் படிப்புக்கும், வேலைக்கான தேவைக்குமான இடைவெளி தற்போது அதிகமாக இருக்கிறது. அதனை பூர்த்தி செய்யும் வகையிலான பாடத் திட்டங்களை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும், அது சிறந்ததாகத் தான் இருக்கும். குறிப்பாக சுய கற்றல் என்பது மாணவர்களுக்கு இன்று மிக அவசிய தேவையாக உள்ளது. வெளிநாடுகள் இதில் வெற்றி கண்டதால்தான் அங்கு உயர்கல்வி சிறப்பாக உள்ளது. அந்த மாற்றத்தை பள்ளிக்கல்வியில் இருந்து ஏற்படுத்த வேண்டும்.

நன்மை அளிக்கும்

பாலக்கோடு அரசு கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி:- அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவ-மாணவிகளுக்கு நன்மை அளிக்கும். இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலை படிப்பிற்கு செல்லும்போது பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருந்தால் மாணவ-மாணவிகள் எளிதாக பாடங்களை புரிந்து கொண்டு படிப்பார்கள். கல்லூரி பாடத்திட்டத்தோடு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் அம்சங்களை இணைப்பது அவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தி கொள்ள உதவும்.

நவீன தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இப்போதைய சூழலில் வேலைவாய்ப்புகளை பெற கல்வி தகுதி மட்டுமின்றி பல்வேறு திறன்களை மேம்படுத்தி கொள்வது அவசியமாகிறது. கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு திறன் உள்ளவர்களாகவும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிப்பவர்களாகவும் வளர்வதற்கு இந்த பாடத்திட்ட மாற்றம் மிகவும் பயன்படும். மொழித் திறன் மேம்பாடு, கணினி திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கல்வி சூழலை மாற்றும்.

கற்பிக்கும் திறன் மேம்பாடு

கல்லூரி பேராசிரியர் கலைமணி:- உயர் கல்வி பாடத்திட்டங்கள் மாற்றப்படுவது மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும். இதனால் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த பாடத்திட்ட மாற்றத்திற்கு ஏற்ப பேராசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனை மேம்படுத்துவது அவசியம். இதற்காக அந்த பாடத்திட்டங்களை கற்பிப்பது தொடர்பாக பேராசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

பாடத்திட்டங்கள் மாற்றத்துடன் வரும்போது அதில் மேலும் என்னென்ன விஷயங்களை சேர்க்கலாம் என்பதில் தொடர் கவனம் செலுத்த வேண்டும். இந்த பாடத்திட்டங்களை உருவாக்கும்போது தற்போதைய கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய அம்சங்களை இடம்பெற செய்ய வேண்டும்.

தெளிவான வழிகாட்டுதல்

கல்லூரி மாணவி சுபத்ரா:- இப்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத்திட்டமாக மாற்றுவது மாணவ-மாணவிகளின் மேல் படிப்பிற்கு உதவும். மேலும் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ள வாய்ப்பு ஏற்படும். புதிய பாடத்திட்ட மாற்றம் மாணவ-மாணவிகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டுவதாக வடிவமைக்கப்பட வேண்டும்.

கல்லூரிகளில் படிக்கும்போதே தங்கள் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும், வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் புதிய பாடத்திட்ட மாற்றம் இருக்க வேண்டும்.

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

கல்லூரி மாணவர் அஜய்:- பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான, பாடத்திட்டங்கள் கொண்டு வருவது பாராட்டுக்குரியது. இந்தப் பாடத்திட்ட மாற்றம் எங்களை போன்ற மாணவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதாக அமைய வேண்டும். இப்போது கல்லூரிகளுக்கு சென்று உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.

இந்த உயர் கல்வி பாடத்திட்டங்கள் மாணவ-மாணவிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதாக அமைய வேண்டும். கல்லூரிகளில் படிக்கும்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் மாணவ-மாணவிகளிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். புதிய பாடத்திட்ட மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்