மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் - ஓ.பன்னீர் செல்வம்

தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக திரு. பாலமுருகன் என்ற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-20 13:01 GMT

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த திரு. பாண்டி என்பவரின் மகன் திரு. பா. பாலமுருகன் நேற்று காலை காந்தி நகர் பகுதியில் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தபோது, அங்கு தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்கம்பி அவர் ஓட்டிச் சென்ற டிராக்டரில் உராய்ந்ததன் காரணமாக, மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

திரு. பாலமுருகனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்றும், இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும், இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் முறையிட்டும், அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக திரு. பாலமுருகன் என்ற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த திரு. பாலமுருகனுக்கு திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆகியுள்ள நிலையில் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று தாழ்வாக சென்ற மின் கம்பியை சரி செய்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தி.மு.க. அரசின் அக்கறையின்மை காரணமாக திரு. பாலமுருகன் அவர்கள் உயிரிழந்துள்ளார் என்பதையும், உயிரிழந்த திரு. பாலமுருகன் அவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம், பொதுமக்கள் அளிக்கும் புகார்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்