புள்ளிமான்கள் வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

மானூர் அருகே புள்ளிமான்கள் வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-31 21:27 GMT

மானூர் தாலுகா துலுக்கர்பட்டி கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் தனது தோட்டத்தில் மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த பாலகணேசன், மணக்கரை பகுதியை சேர்ந்த சங்கர், மதுரையை சேர்ந்த ராமநாதன், அழகுமாணிக்கம், துலுக்கர்பட்டியை சேர்ந்த ராமன் ஆகியோருடன் 3 புள்ளிமான்களை வேட்டையாடி இறைச்சியாக்கி வைத்திருந்தனர். தகவல் அறிந்த மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் பாலகணேசன், ராமன் ஆகியோர் தப்பி சென்றனர். ஜெயக்குமார், சங்கர், அழகுமாணிக்கம், ராமநாதன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தப்பிச்சென்றவர்களை பிடிக்க பாளையங்கோட்டை பிரிவு வனவர் அழகர்ராஜ் தலைமையில் சிறப்பு பணிவனவர் புஸ்பராஜா, வனக்காப்பாளர்கள் மதியழகம், அஜித்தேவஆசீர், மணிகண்டன், மாரித்துரை ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று மதுரையில் பதுங்கி இருந்த பாலகணேசனை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ராமனை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் பற்றிய தகவல் தெரிந்தாலோ அல்லது வன விலங்குகள் வேட்டையாடுவது பற்றிய தகவல் தெரிந்தாலோ 0462 2553005, 0462 2903605 என்ற வனத்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்