கரடியை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
களக்காடு அருகே கரடியை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே கீழவடகரை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி கரடி இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், தோட்டத்தில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் கறியை பங்கு போட்டது தெரிய வந்தது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கரடியை வேட்டையாடியது தொடர்பாக, நாகன்குளத்தை சேர்ந்த தோட்ட காவலாளியான கணேசனை ஏற்கனவே வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ரமேஷ் (33) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளின் கறியை பங்கு போட்டது தொடர்பாக, தலைமறைவான சுமார் 20 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.