உப்பள தொழிலாளருக்கு ஒருமாத சம்பளத்தை போனசாகவழங்க வேண்டும் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
உப்பள தொழிலாளருக்கு ஒருமாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
உப்பள தொழிலாளருக்கு ஒருமாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று தொழிலாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பிரதிநிதிகள் மாநாடு
தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு 17-வது பிரதிநிதிகள் மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்கத்தலைவர் கே.பொன்ராஜ் தலைமை தாங்கினார். சங்க செயல் தலைவர் எம்.ராமசாமி சங்க கொடி ஏற்றி வைத்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை உதவி தலைவர் எஸ் லிங்கம்மாள் வாசித்தார். உதவி செயலாளர் ஐ.பாஸ்கர் வரவேற்றுப் பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து, உதவி தலைவர் ஏ.ரவி தாகூர் ஆகியோர் பேசினர். தீர்மானங்களை உதவி செயலாளர்கள் ஏ.முனியசாமி, எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்மொழிந்தனர்.
மழைக்கால நிவாரணம்
மாநாட்டில் தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணம் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ரூ.5 ஆயிரமாக உள்ள மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உப்பளங்களில் பணி செய்யும் இடங்களில் சுகாதாரமான குடிநீர், கழிவறை, வருகை பதிவேடு, சம்பள ரசீது, வார விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சம்பளம் கேரளாவை போல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.700 வழங்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியமாக அறிவிக்கப்பட்டுள்தை வரவேற்கிறோம். அதேபோன்று கூடுதலாக நிதி ஒதுக்கி செயல்பாடை விரைந்து தொடங்க வேண்டும். உப்பளத் தொழிலை பாதுகாக்க அரசு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் சங்க புதிய தலைவராக கே.பொன்ராஜ், செயல் தலைவராக எஸ்.லிங்கம்மாள், பொதுச்செயலாளராக கே.சங்கரன், பொருளாளராக கே.மணவாளன், உதவி தலைவர்களாக எம்.ராமசாமி, எம்.பன்னீர், எஸ்.கிருஷ்ணம்மாள், எம்.ஞானதுரை, ஏ.சக்கரபாண்டி, கே.கிருஷ்ணன், என்.பக்கிள், உதவி செயலாளராக பாஸ்கர், எம்.பன்னீர்செல்வம், ஏ.முனியசாமி, பி.பாக்கியலட்சுமி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உதவி தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.