ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை
நெல்லையில் முகூர்த்த நாட்களையொட்டி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
நெல்லையில் முகூர்த்த நாட்களையொட்டி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
முகூர்த்த நாட்கள்
கார்த்திகை மாதத்தில் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 12-ந் தேதி (திங்கட்கிழமை) என 2 நாட்கள் தொடர்ந்து முகூர்த்த நாட்களாக அமைந்துள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏராளமான திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்காக மண்டபங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரம்
அதில் முக்கியமாக பூக்களுக்கும் அதிக வரவேற்பு இருப்பதால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. நெல்லை சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ விலை கிேலா ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் என இருந்தது. அது நேற்று ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
மாண்டஸ் புயல் காரணமாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ வரத்தும் குறைந்து இருந்தது. இதனால் விற்பனைக்கு வந்திருந்த மல்லிகைப்பூ அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்று தீர்ந்தன. வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.
மற்ற பூக்கள் விலை
இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ நேற்று ரூ.1,500-க்கு விற்பனை ஆனது.
கனகாம்பரம் பூ விலை ரூ.2 ஆயிரமாக இருந்தது. கேந்தி ரூ.60-க்கும், சம்பங்கி-ரூ.150, ரோஜா-ரூ.150, வாடாமல்லி-ரூ.60, கோழிக்கொண்டை ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுதவிர விருந்து உபசரிப்பதற்கு அத்தியாவசிய தேவையான வாழை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 100 இலைகள் கொண்ட 1 கட்டு விலை அதிகப்பட்சமாக ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் வாழை இலைகள் விலை இதைவிட கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.