லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
திருவண்ணாமலையில்லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் அரவிந்த்பாபு தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கனரக சரக்கு வாகனங்களில் கூடுதல் எடை ஏற்றக்கூடாது என்று போடப்பட்ட தமிழக அரசின் சட்டத்தை அனைவரும் பின்பற்றி நடக்க வலியுறுத்தியும், ஓவர் லோடு ஏற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவண்ணாமலை மாவட்ட சரக்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
அரசு நிர்ணயித்த எடை மட்டும் ஏற்றி செல்லப்படும். இதற்கு வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 200 உறுப்பினர்களின் 500 லாரிகளினால் சுமார் ரூ.20 லட்சம் வருமான இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி திருவண்ணாமலை புறவழிச் சாலையில் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.