ஒருநாள் வேலை நிறுத்தம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம தபால் ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2023-10-04 20:23 GMT

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம தபால் ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

தஞ்சை கோட்ட அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய கிராம தபால் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க கோட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் ரமேஷ், செயலாளர் கருப்புசாமி, தேசிய கிராமிய தபால் ஊழியர் சங்க தலைவர் முனியகுமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரெங்கநாதன், கோட்ட ஆலோசகர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

8 மணி நேர வேலை

போராட்டத்தில் ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி ஓய்வூதியம் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பயனுடன் கூடிய 3 கட்ட பதவி உயர்வு, 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூ.5 லட்சம், குரூப் இன்சூரன்சு ரூ.5 லட்சம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தஞ்சை தபால் கோட்டத்தில் உள்ள 425 கிளை அலுவலகங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் பட்டுவாடா பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்