ரூ.1 கோடி வாடகை பாக்கி வைத்த 22 கடைகளுக்கு 'சீல்'
ரூ.1 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த கடைக்காரர்களின் 22 கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் ரூ.1 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த கடைக்காரர்களின் 22 கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாநகராட்சி வணிக வளாகங்கள்
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டு கடைக்காரர்கள் வாடகை செலுத்தி வருகிறார்கள். 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாடகையினங்கள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளவர்கள் நிலுவைத்தொகையை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.
திருப்பூர் மத்திய பஸ் நிலைய கடைகள் இடிக்கப்பட்டபோது அந்த கடைக்காரர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் கடைகளுக்கான வாடகை சதவீதம் குறைத்து வசூலிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சியின் மற்ற பகுதியில் உள்ள கடைக்காரர்களும் கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி வாடகை செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கோர்ட்டை நாடி, வாடகை வசூலிக்க உத்தரவு பெற்றனர்.
22 கடைகளுக்கு 'சீல்'
இதைத்தொடர்ந்து நிலுவை வாடகைத்தொகையை விரைந்து செலுத்துமாறு கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அவகாசம் வழங்கியது. அதன்பிறகும் அவர்கள் வாடகையினங்களை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அதிகப்படியான வாடகை தொகை செலுத்தாத கடைகளை பூட்டி 'சீல்' வைக்க மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்படி துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியம், உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை முதல்கட்டமாக திருப்பூர் அவினாசி ரோடு பாரதியார் வணிக வளாகத்தில் உள்ள 22 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். அந்த கடைகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
ரூ.10½ கோடி வரி பாக்கி
மாநகரில் மொத்தம் 169 கடைகளுக்கு வாடகை பாக்கியாக ரூ.10½ கோடி நிலுவை உள்ளது. அந்த கடைகளை பூட்டி சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையில் இருந்து தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.