இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- கி.வீரமணி அறிக்கை

இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-01 12:21 GMT

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திடீரென்று நாடாளுமன்றத்தின் சிறப்புத் தொடர் கூட்டங்கள் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பிரதமர் மோடியின் திட்டமான ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசின் கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, அதனை சட்டமாக இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றிவிட்டு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டியே (அதுவும் முன்கூட்டியேகூட நடத்தப்படலாம் என்ற ஊகங்கள்படி) நடத்தப் பெற திட்டமிட்டு, இதில் இறங்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

'இந்தியா' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியாக ஒன்று சேர்ந்து, மத்திய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மோடி அரசை தேர்தல் வாக்களிப்பு மூலம் அகற்ற ஆயத்தமாகி, நாளுக்கு நாள் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் பெற்று வருவதுடன், தங்களுக்குள்ள வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையுடன் தேர்தலில் திரள உறுதி பூண்டுள்ளதால், இப்படி ஒரு தந்திரம், அரசியல் வியூகத்தை அமைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் ஒற்றுமையாக முடித்துவிட்டு, பிறகு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி அந்தந்த மாநிலங்களில் தங்கள் தங்கள் வாய்ப்பு, விருப்பப்படி நடத்திக் கொள்ள உள்ள நிலைமையை முற்றிலும் தலைகீழாக மாற்றியும், தொகுதி பங்கீட்டில் ஒரு பெருங்குழப்பத்தை இந்த கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்படுத்தவும் வித்திடுவதே இந்தத் திட்டத்தின் மூல நோக்கமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்