ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்

நெல்லையில் ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

Update: 2022-08-20 19:24 GMT

நெல்லையில் ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

ஒண்டிவீரன் தபால் தலை

இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, தபால் தலையை வெளியிட்டார். அதை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் ஞானதிரவியம், அந்தியூர் செல்வராஜ், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., தலைமை தபால்துறை தலைவர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

திரிக்கப்பட்ட வரலாறு

இந்தியா வீரம் நிறைந்த பூமி ஆகும். வேலூர் சுதந்திர போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தியர்கள் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை நடத்தினர். இதில் பல போராட்ட வீரர்கள் பற்றிய வரலாறு தெரியாத அளவிற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு பாதிரியார் இந்தியாவின் வரலாற்றை திரித்து எழுதி விட்டார்.

இந்தியாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கல்வி மற்றும் யாத்திரைக்காக சென்று வந்துள்ளனர். பல்லவ இளவரசர்கள் அசாமில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்து உள்ளனர். காசியில் உள்ள மக்கள் காஞ்சீபுரம், ராமேசுவரத்திற்கும், இங்கு உள்ளவர்கள் காசிக்கும் யாத்திரை சென்று கோவில்களில் வழிபாடு செய்து உள்ளனர். இது எல்லாம் வரலாற்றில் இல்லை. ஆனால், தற்போது புதிய இந்தியாவில் வரலாறு எழுதப்படுகிறது. இதில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகளும் எழுதப்படுகின்றன.

கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கையில் தமிழகம் 50 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்திய அளவில் 26 சதவீதம் தான் உள்ளது. இதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் 13 சதவீதம் தான் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். இந்தியா உலகம் போற்றும் வகையில் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க நாம் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், 'நெல்லை ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களை தந்த பூமி. ஒண்டிவீரன் ஒண்டியாக நின்று போராடி வெற்றி பெற்றதால் அவர் ஒண்டிவீரன் என்று பெயர் பெற்றார். அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த முருகனை, பிரதமர் மோடி மத்திய மந்திரி ஆக்கி அந்த சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். கருணாநிதி ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கினார். அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மணிமண்டபம் கட்டினார்கள். இன்று ஒண்டிவீரனின் வரலாற்றை உலகம் அறியக்கூடிய அளவிற்கு பிரதமர் மோடி அவரது தபால் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளார்' என்றார்.

மத்திய மந்திரி எல்.முருகன் பேசுகையில், 'நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான பின்பு தான் ஒண்டிவீரனின் சமுதாயத்தைச் சேர்ந்த, அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய மந்திரியாகி உள்ளார். இதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

விழாவில் காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, முன்னாள் துணை சபாநாயகர் துரைச்சாமி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோவிந்தராஜன், முரளி யாதவ், பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தீபா, ஒண்டிவீரன் தேசிய பேரவை நிர்வாகி காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒண்டிவீரன் தேசிய பேரவை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

சிலைக்கு மாலை

முன்னதாக பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து பாளையங்கோட்டை அருண் மஹாலில் நடந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு ஆகியவற்றை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, தகவல் ஒளிபரப்பு அமைச்சக தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், கூடுதல் இயக்குனர் அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்