கம்பத்தில்ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்

கம்பத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2023-03-23 18:45 GMT

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நகராட்சி சுகாதார பிரிவு மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4-வது வார்டு காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையில் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்து வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் மாதவன் சாக்கடை கால்வாயை தற்காலிகமாக சரிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியனிடம் கோரிக்கை வைத்தார். அதன்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார், துப்புரவு பணியாளர்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சாக்கடை கால்வாய் மீது வீடுகள், படிக்கட்டுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், படிக்கட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இந்த பணிகளை நகராட்சி தலைவர், சுகாதார ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்