உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மூலவைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மூலவைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.
கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கரட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் கழிவு நீருடன் பிளாஸ்டிக் குப்பைகளும் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதன் அருகே உறை கிணறுகள் அமைந்துள்ளதால் குடிநீர் மாசடையும் நிலை காணப்பட்டது.
இதனால் ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று கடமலைக்குண்டு ஊராட்சி சார்பில், கரட்டுப்பட்டி வைகை ஆற்றில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.
கடமலைக்குண்டு தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணிகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர். 2 நாட்களில் பிளாஸ்டிக் குப்பைகள் முழுமையாக அகற்றப்படும். மேலும் அடுத்த கட்டமாக கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.