வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update: 2023-01-02 18:45 GMT

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெருமாள் கோவில்களில் நேற்று சொா்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன்படி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் காலை முதலே திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்க வாசல் திறப்பு

வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வேணுகோபாலகிருஷ்ணன் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கதலிநரசிங்க பெருமாள் கோவிலில் நேற்று காலை 10 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு துளசி மாலை சாத்தப்பட்டது.

பின்னர் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. சக்கரத்தாழ்வாருக்கு விமோசனம் கொடுத்த கதலிநரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக கொண்டு வரப்பட்டார். பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

அப்போது கோவில் சொர்க்க வாசல் முன்பாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.

பெரியகுளம் வடகரை பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து உற்சவர் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் நகர் பகுதி முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

வரதராஜபெருமாள்

தேனி அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோவிலில் 9-ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. விழாவில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில், கலை நிகழ்ச்சிகள், உபன்யாசம் நிகழ்ச்சி, பஜனை ஆகியவை நடந்தன. இதில் அல்லிநகரம் கிராம கமிட்டியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை வைகுண்ட ஏகாதசி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்