பொங்கல் விழாவை முன்னிட்டுதமிழர்களின் அடையாளம், பெருமையை பாதுகாக்க உறுதி ஏற்போம்:கனிமொழி எம்.பி.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் அடையாளம், பெருமையை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-08 18:45 GMT

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் அடையாளம், பெருமையை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

சமத்துவ பொங்கல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை தூத்துக்குடி திரேஸ்புரம் பாக்கியநாதன்விளையில் நடந்தது. விழாவுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொங்கலிட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 15 பானைகளில் பொங்கல் வைத்தனர்.

விழாவில் கனிமொழி எம்.பி. பேசும் போது, ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களுக்கும், ஒவ்வொரு மதத்தை சார்ந்த மக்களுக்கும், ஒவ்வொரு பண்டிகை, திருவிழாக்கள் வழக்கமான ஒன்று. ஆனால் நம் அத்தனை பேரையும் தமிழர்களாக இணைக்கக்கூடிய ஒரு விழா இருக்கிறது என்றால் அது பொங்கல் மட்டும்தான். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், அனைவரும் தமிழர்களாக இணைந்து நின்று கொண்டாடக்கூடியது பொங்கல் திருவிழா. அந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவதில் தி.மு.க. அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது தமிழக கவர்னர் ஒவ்வொன்றிலும் நம்முடைய அடையாளங்களை, நம் பெருமைகளை, கலாசாரத்தில், பண்பாட்டில் நம்முடைய வரலாற்றில் மூக்கை நுழைக்க தொடங்கி உள்ளார். இந்த காலகட்டத்தில் நாம் பெருமையாக, தமிழர்களாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக கொண்டாடக்கூடிய நிகழ்வு பொங்கல் திருவிழா.

பாதுகாப்போம்

நாம் ஒவ்வொருவரும் இந்த பொங்கல் நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு சூளுரை இருக்கிறது. அதாவது நாம் நம்முடைய அடையாளங்களை, தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, தமிழனின் அடையாளங்களை, பெருமையை, நமக்கு என்று இருக்க கூடிய தனித்திறமையை, நம்முடைய வரலாற்றின் அடிகளை பாதுகாப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு அங்கமாக நம்முடைய பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முறை பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும், தலைவர் கருணாநிதி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு பொங்கல் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். அதையும் தாண்டி, விறகு அடுப்பின் முன்னால் நிற்கும் போது, பெண்கள் கண்ணை கசக்கி கொண்டு நிற்கிறார்கள். ஆகையால் அவர்கள் கண்ணை கசக்க கூடாது, புகையை சுவாசிக்க கூடாது என்று பெண்களுக்கு இலவச கியாஸ் அடுப்பை தந்தார். அவரது நினைவை இந்த பொங்கலிலும் போற்றுவோம். தமிழகத்தை அடுத்த தலைமுறைக்கு முன்நகர்த்தி செல்லக்கூடிய நம்முடைய முதல்-அமைச்சர், அனைவருக்கும் பொங்கல் பரிசுகளை தந்து கொண்டு இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்களை சொல்லுவோம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்