பொங்கல் நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:
பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள்.
போற்றுதலுக்குரிய உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது ஆட்சியிலும், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன என்பதை, இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.
அறுவடைத் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; இப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்; வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்;
இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.