ஓணம் பண்டிகையையொட்டி 500 டன் வண்ண பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறும் சிறப்பு விற்பனையில் 500 டன் பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இப்போதே தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட தொடங்கியது.

Update: 2022-09-03 15:25 GMT

ஆரல்வாய்மொழி,

ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறும் சிறப்பு விற்பனையில் 500 டன் பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இப்போதே தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட தொடங்கியது.

தோவாளை பூ மார்க்கெட்

குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. அதுமட்டுமின்றி நெல்லை, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து டன் கணக்கில் வரும் பூக்களுக்கும் இங்கு மவுசு அதிகம்.

இந்த பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பார்கள். அண்டை மாநிலமான கேரளாவுக்கு அதிக அளவில் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு ெசல்லப்படுகிறது. அதுவும் ஓணம் பண்டிகை சமயத்தில் கேரள வியாபாரிகள் வழக்கமான நாட்களை விட அதிகளவில் பங்கேற்பார்கள்.

ஓணம் பண்டிகை

தோவாளை மார்க்கெட்டில் பொதுவாக பண்டிகை மற்றும் விழா காலங்களில் விலை அதிகமாகவும், மற்ற நாட்களில் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக ஆயுத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உச்சத்தை எட்டும். தற்போது ஓணம் பண்டிகை கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்தே தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட தொடங்கியது.

ஓணம் பண்டிகை விற்பனைக்காக 1 மாதத்திற்கு முன்பே பூக்களை கொண்டு வருவதற்காக தோவாளை வியாபாரிகள் வெளிமாவட்டத்தில் உள்ள ஊர்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் ஓணம் பண்டிகை தொடங்கிய நாளில் இருந்து தற்போது தினமும் சுமார் 50 டன் பூக்கள் விற்பனையாகி வருகிறது.

500 டன் பூக்கள் விற்பனையாகும்

பொன் ஓணம் என்று சொல்லக்கூடிய ஓணம் பண்டிகை வருகிற 8-ந் தேதி வருகிறது. இதற்காக தோவாளை மார்க்கெட்டில் சிறப்பு விற்பனை 6-ம் தேதி இரவில் இருந்து விடிய, விடிய நடைபெறும். அன்றைய தினம் தான் கேரளாவில் இருந்து சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் பூக்கள் வாங்க தோவாளை மார்க்கெட்டுக்கு படை எடுப்பார்கள்.

இதனால் ஓணம் பண்டிகை சமயத்தில் சுமார் 300 டன் பூக்கள் விற்பனையாகும் என்று தெரிகிறது. ஒரு வருடத்தில் இரவு பூ வியாபாரம் நடப்பது அன்றய தினம் மட்டும் தான். அதுமட்டுமல்ல 7-ந் தேதி காலையிலும் 200 டன் வரை பூக்கள் விற்பனையாகும். இதற்கான வண்ண பூக்களை கொண்டு வர முன்பதிவு செய்துள்ளோம் என்று பூ வியாபாரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2 வருடமாக கொரோனா கால கட்டம் என்பதால் ஓணம் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. தற்போது பண்டிகை கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியதால் இந்த வருடம் நாங்கள் எதிர்பார்க்கும் விற்பனை நடந்து வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை தரும்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்