தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்களில் 14 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மண்டலத்தில் கூடுதலாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 14 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.;

Update: 2022-10-26 23:01 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மண்டலத்தில் கூடுதலாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 14 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார்கள். இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர் உள்பட மொத்தம் 11 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் இருந்து தீபாவளி பண்டிகையையொட்டி 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

46½ லட்சம் பயணிகள்

ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட பஸ் நிலையங்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பணியில் ஈடுபட்டார்கள். அப்போது எந்த ஊர்களுக்கு அதிக பயணிகள் காத்திருந்தார்களோ அந்த ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு ஏராளமானவர்கள் சென்றதால் அங்கு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

ஈரோடு மண்டலத்தில் புறநகர் பஸ்களில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 927 பயணிகள் பயணம் செய்தார்கள். மேலும், கூடுதலாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 14 லட்சத்து 8 ஆயிரத்து 663 பயணிகள் பயன்படுத்தி உள்ளார்கள். இதேபோல் தீபாவளி பண்டிகையின்போது டவுன் பஸ்களில் 21 லட்சத்து 24 ஆயிரத்து 560 பயணிகள் சென்று உள்ளனர். எனவே மொத்தம் 46 லட்சத்து 62 ஆயிரத்து 150 பயணிகள் தீபாவளியையொட்டி அரசு பஸ்களில் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்