சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தாளவாடி
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தாளவாடியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் தாளவாடி பஸ் நிலையம் அருகே 7 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
இதேபோல் அண்ணா நகர், சேஷன் நகர், கனகதாசர் வீதி, பூஜேகவுடர் வீதி, தலமலை ரோடு, நேதாஜி சர்க்கிள், பாரதிபுரம், ராமாபுரம், ஆசனூர், ஒசூர், இரிபுரம், ஒசூர் ரோடு ஆகிய 16 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) ஊர்வலமாக எடுத்து சென்று தலமலை ரோட்டில் உள்ள ஆற்றில் கரைக்கப்படுகிறது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி நகர இந்து முன்னணி சார்பில் பஸ் நிலையம் முன்பு 11 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். முன்னதாக யாக பூஜை நடந்தது.
இன்று (புதன்கிழமை) நாவலர் தெரு, காந்தி நகர், அண்ணா நகர், தங்க சாலை வீதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 4-ந் தேதி விநாயகர் சிலை டானா புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பவானிசாகர் பகுடுதுறை பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. மேலும் பனையம்பள்ளி ஜவகர் மெயின் ரோடு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெருந்துறை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பெருந்துறையில் 2 சிலைகளும், காஞ்சிக்கோவிலில் 11 சிலைகளும் வைக்கப்படுகின்றன. இந்த சிலைகளுக்கு, பூஜைகள் நடத்தப்பட உள்ளன.