ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-19 20:18 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. இந்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் ஜெயந்தி விழா மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தையொட்டி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஜெயந்தி விழா வருகிற 23 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி முன்னதாக 22-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயக ருக்கு அபிஷேகம், 10 மணிக்கு தாணுமாலயசாமிக்கு அபிஷேகம், 11:30 மணிக்கு உச்சகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

லட்டு தயாரிக்கும் பணி

23-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தியை யொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் பால், மற்றும் தயிர், நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர், விபூதி, களபம், நெய், அரிசி மாவு பொடி உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்சம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற உள்ளது.

50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்

லட்டு தயாரிப்பதற்காக 1½ டன் கடலை மாவு, 5 டன் சீனி, 150 டின் எண்ணெய், 50 கிலோ முந்திரி பருப்பு, 50 கிலோ நெய், 50 கிலோ ஏலக்காய், 20 கிலோ கிராம்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. சங்கரன்கோவிலை சேர்ந்த கணேசன் என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்ன பிரசாதமாக புளியோதரை வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்