ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி குளிப்பதற்கும் தடை நீங்கியது

பரிகாரம் செய்ய அனுமதி

Update: 2022-07-26 15:37 GMT

ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்கும் தடை நீங்கியது.

ஆடி அமாவாசை

பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள். இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் வந்து காவிரியில் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்து. ஆனால் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கூடுதுறை காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நீராட அனுமதி

ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்கள் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து குளிப்பதற்கு வசதியாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் குளிப்பதற்காக தனி தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிகாரம் மற்றும் திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு இருந்த தடையையும் நீக்கியுள்ளனர்.

இதற்காக கோவிலில் ஆங்காங்கே இடங்கள் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, என்.சி.சி. என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்