சாராய வியாபாரி மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சம்பவத்தன்று பட்டாக்குறிச்சி ஏரிக்கரை மண்ரோடு அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாத ஸ்கூட்டரில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்தனர். தொடர்ந்து ஸ்கூட்டரில் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த திட்டக்குடி அடுத்த பட்டாங்குறிச்சியை சேர்ந்த சாராய வியாபாரி வேல்முருகன் (வயது 46) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கைதான வேல்முருகன் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 3 சாராய வழக்குகளும், ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு வேல்முருகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், வேல்முருகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேல்முருகனிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.