கடைசி நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்
இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளில் 27 பேர் மனு தாக்கல் செய்தனர்.;
புதுக்கோட்டை:
தி.மு.க.-பா.ஜ.க. வேட்பாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் பதவி, வெட்டுக்காடு, மேலப்பட்டு, நெடுங்குடி, தென்னங்குடி, தொண்டைமான் ஊரணி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 22 இடங்களுக்கும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாளாகும்.
இதனால் புதுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று தி.மு.க.வினர், பா.ஜ.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர். இதையடுத்து தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பா.ஜ.க. சாா்பில் முருகேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் பார்த்திபன் உள்பட மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மாற்று வேட்பாளர்களும் அடங்குவார்கள்.
27 பேர் மனு தாக்கல்
இதேபோல் தொண்டைமான் ஊரணி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் நேற்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தி.மு.க., பா.ஜ.க.வினர் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கூட்டமாக காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெட்டுக்காட்டில் 6 பேரும், மேலப்பட்டில் 2 பேரும், நெடுங்குடியில் 4 பேரும், தென்னங்குடியில் 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5 பேரும் என நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன்படி மொத்தம் 28 பதவிகளுக்கு 63 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் பரிசீலனை
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.