களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
களக்காடு தலையணை 24 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.;
களக்காடு:
களக்காடு தலையணை 24 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.
களக்காடு தலையணை
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் செல்வதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தலையணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதனால் களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
குளிக்க அனுமதி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளம் தணிந்ததால் நேற்று காலை முதல் தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்ததை தொடர்ந்து அவர்கள் தலையணையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 24 நாட்களுக்கு பிறகு தலையணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.