தீபாவளியை முன்னிட்டு ஆவின் இனிப்பு, காரவகைகளின் விற்பனை தொடக்கம்

திருவண்ணாமலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு, காரவகைகளின் விற்பனை தொடங்கப்பட்டது.

Update: 2022-09-27 16:17 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை விநியோக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கு இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.

இதுகுறித்து கலெகடர் முருகேஷ் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் மைசூர்பா 20 டன், மற்ற இனிப்பு வகைகள் 10 டன் மற்றும் கார வகைகள் 10 டன் ஆக மொத்தம் 40 டன் தயாரித்து விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ஆவின் மைசூர்பா, கார வகைகள் (முந்திரி மிக்ஸர்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட இலக்கான ரூ.76½ லட்சத்தில் இருந்து இந்த ஆண்டு ரூ.3 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் பொது மேலாளர் ராஜாகுமார், துணை பதிவாளர் (பால்பதம்) சந்திரசேகர ராஜா, ஒன்றிய பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்