குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் கனமழையில் விழுந்த பாறைகள் அகற்றப்படாததால் விபத்து அபாயம்- வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

தென்மேற்கு பருவமழையின் போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த பாறைகள் அகற்றப்படாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2022-09-23 18:45 GMT

ஊட்டி

தென்மேற்கு பருவமழையின் போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த பாறைகள் அகற்றப்படாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கனமழை

நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கி கடந்த மாதம் தீவிரமடைந்தது. குறிப்பாக இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 100 சதவீதத்திற்கும் அதிகமாக தாண்டி பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருவதோடு, நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.மேலும் ஆறுகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதில் கல்லட்டி மலைப் பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே சாலையில் பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இதைத் தொடர்ந்து மறுநாள் வருவாய்த் துறையினர் அந்த பாறைகளை சாலையோரம் தள்ளிவிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்து அபாயம்

இந்த நிலையில் தற்போது வரை அந்த பாறைகள் சாலையோரம் அப்படியே உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த வழியாக ஊட்டிக்கு வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த பாறைகள் சாலைஓரம் அப்படியே உள்ளன. பகல் நேரத்தில் சாலையோரம் பாறைகள் இருப்பது தெரிகிறது. ஆனால் இரவு நேரத்தில் பாறைகள் இருப்பது சரியாக தெரிவதில்லை. மலைபாங்கான பிரதேசத்தில் ஒரு மாத காலம் பாறைகளை அகற்றாமல் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம். தினசரி இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு பாறைகள் இருப்பது தெரியலாம். ஆனால் புதிதாக சுற்றுலா வருபவர்களுக்கு இந்த பாறைகள் இருப்பது இரவு நேரத்தில் தெரியாது. இதனால் பெரிய விபத்து ஏற்படும் அசம்பாவிதம் உள்ளது.

எனவே உடனடியாக பாறைகளை அகற்ற வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் முன் வர வேண்டும். அதுவரை பாறைகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வரை எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்