தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியஅரிய வகை ஆமை
தூத்துக்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. பிரேத பரிசோதனைக்கு பின் அந்த ஆமை புதைக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை ஆமை கரை ஒதுங்கியது.
அலுங்காமை
உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
இதில் அலுங்காமை கடல் ஆமைகளில் மிகவும் அழகான ஒன்று ஆகும். இந்த ஆமை தவிடு நிறத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய மேலோட்டைப் பெற்றிருக்கும். இவற்றின் உதடுகள் பருந்தின் அலகுபோல அமைந்திருப்பது சிறப்பு தன்மையாகும். உதடுகளைப் பயன்படுத்தி இவை சிப்பிகளை உடைத்து தின்னும். ஒரு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இவை ஒரே நேரத்தில் 95 முதல் 182 முட்டைகள் வரை இடும். இவற்றின் இறைச்சி விஷத்தன்மை உள்ளது.
இறந்த நிலையில் ஒதுங்கியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண் அலுங்காமை ஒன்று தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கியது. இந்த ஆமை 90 சென்டி மீட்டர் நீளமும், 106 கிலோ எடையுடன் இருந்தது. இது தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமை ஆகும்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனவர் மதன்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு புதியம்புத்தூர் கால்நடை உதவி டாக்டர் கவுரி சங்கர் தலைமையிலான அலுவலர்கள் ஆமையை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அந்த ஆமை புதைக்கப்பட்டது.