போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி தமிழகத்தில் 30-ந் தேதி பா.ம.க. போராட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி வரும் 30-ந் தேதி (சனிக்கிழமை) பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-24 18:38 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் கலாசாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாசாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக எவரேனும் கைது செய்யப்பட்டால், அடுத்த நாளே அவருக்கு மாற்றாக இன்னொருவர் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தொடங்கி விடுகிறார். கைது செய்யப்பட்டவரும் 15 நாட்களில் விடுதலையாகி வந்து மீண்டும் போதைப்பொருட்களை விற்பனை செய்ய தொடங்கி விடுகிறார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதன் மூலமாக மட்டுமே போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும்.

கடும் கட்டுப்பாடுகள்

மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, எனது அறிவுறுத்தலின் பேரில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

இந்தியா முழுவதும் குட்காவை தடை செய்வதற்கான விதிகளை வகுத்தார். அதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் குட்கா தடை செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி, அப்போதைய தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அன்புமணி ராமதாஸ்தான் தொடர்ந்து கடிதங்களை எழுதி, தடை செய்ய வைத்தார்.

போராட்டம்

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தில் குட்காவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. பிற போதைப்பொருட்களின் விற்பனையும் தலைவிரித்து ஆடுவது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்பார். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள போராட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்