ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ேவலூர் மாவட்டங்களுக்கு 20, 21-ந் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20, 21-ந் தேதிகளில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20, 21-ந் தேதிகளில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20, 21-ந் தேதிகளில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வேலூர் புதிய பஸ்நிலையம் திறப்பு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந் தேதி காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு ராணிப்பேட்டைக்கு வருகிறார்.
மாவட்ட எல்லையில் அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நண்பகல் 12.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை-வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பூட்டுத்தாக்கில் அமைந்துள்ள சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்கிறார்.
கலெக்டர் அலுவலகம் திறப்பு
அதைத்தொடர்ந்து அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
மாலை 4 மணியளவில் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
விழாவிற்கு பின்னர் முதல்-அமைச்சர் காரில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு செல்கிறார். அன்றிரவு ஆம்பூரில் ஓய்வெடுக்கிறார்.
21-ந் தேதி காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்பூரில் காலை உணவு சாப்பிடுகிறார். பின்னர் அவர் காலை 10 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலையில் உள்ள டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
வேலூர் புதிய பஸ்நிலையம்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் மாநகருக்கு வருகை தருகிறார். வேலூர் மாவட்ட எல்லையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 1 மணிக்கு வேலூர் புதிய பஸ்நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவருந்தி விட்டு சிறிதுநேரம் ஒய்வெடுக்கிறார். மாலை 4.30 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் சுற்றுலா மாளிகைக்கு வர்ணம் பூசுதல், வளாகத்தை அழகுப்படுத்துதல் உள்ளிட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. கோட்டை மைதானத்தில் விழாவிற்கான மேடை மற்றும் பயனாளிகள் அமருவதற்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
2 ஆயிரம் போலீசார்
முதல்-அமைச்சர் வருகையையொட்டி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் சரக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) ஆகியோர் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.