புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.

Update: 2023-09-30 22:23 GMT


புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

2-வது சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்ததாகும். அன்று சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படும். அன்னதானமும் அளிக்கப்படும். அதன்படி நேற்று 2-வது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கோபி அருகே மூல வாய்க்காலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. மேலும் பக்தர்கள் மலையை சுற்றி சாமியை தேரில் இழுத்து வலம் வந்தனர்.

கோபி

இதேபோல் கோபி வரதராஜ பெருமாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் கோபி அருகே கூகலூரில் உள்ள சிவபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. சிவ பக்த ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னதி, இச்சிப்பாளையம் கிராமத்தில் கோனப்பெருமாள் கோவில் மற்றும் கிழக்காலூரில் உள்ள பெருமாள் கோவில், வடக்கு புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயர் சன்னதி, கொளாநல்லியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கொந்தளம் வரதராஜ பெருமாள் கோவில், ஊஞ்சலூர் அருகில் உள்ள பனப்பாளையம் ஸ்ரீராமர் சன்னதி, கொளத்துப்பாளையம் சீதாராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை அழகுராஜா பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டன.

இதேபோல் அந்தியூர் தேர் வீதியில் அமைந்துள்ள பேட்டை பெருமாள் கோவில், கருவாச்சி மலை கோவில் உள்ள கரிய வரதராஜ பெருமாள் கோவில், தவுட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், கெட்டிசமுத்திரம் கரை பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெருந்துறை

பெருந்துறை அருகே எல்லப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரிய மாணிக்க பெருமாள் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் ெசய்யப்பட்டன. ஸ்ரீதேவி பூதேவியுடன் கரிய மாணிக்கப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்