"நீட் தேர்வு விலக்கு மசோதா மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்"

“நீட் தேர்வு விலக்கு மசோதா மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-08-14 19:27 GMT


"நீட் தேர்வு விலக்கு மசோதா மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நீட் தேர்வு

விருதுநகர் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ துறை சார்ந்து கட்டப்பட்டுள்ள 12 கட்டிடங்களை அந்த துறையின் அமைச்சரான மா.சுப்பிரமணியன் ேநற்று காலை திறந்துவைத்தார். இதற்கான விழா விருதுநகர் அருகே செங்குந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. விழாவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், சென்னை சிட்லபாக்கம் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. 'நீட்க்கு' இதுவே கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும். மாணவன் ெஜகதீஸ்வரன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பேன்.

மாணவர்களுக்கு மருத்துவம் மட்டும்தான் படிப்பு அல்ல. எத்தனையோ மேற்படிப்புகள் உள்ளன. எனவே மாணவர்கள் விபரீத முடிவு எடுக்கக்கூடாது.

சட்ட நிபுணர்

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கவர்னர் கையெழுத்திடாத நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக நீட் தேர்வு விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதியும் உடனடியாக அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வு துறையில் பல்வேறு விளக்கங்களை கேட்டது. அதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மசோதா மீது ஜனாதிபதி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

உயர் சிகிச்சை

ஜனாதிபதி இதுபற்றி கவர்னருக்கு தகவல் தெரிவிப்பார். கவர்னர் தமிழக மக்கள் நலனுக்கு எதிராக மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வு குறித்து பேசுவது ஏற்புடையதல்ல.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் தேர்வுக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 347 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 26 இடங்களும் காலியாக உள்ளன. அதுவும் விரைவில் நிரப்பப்படும். துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கிவிட்டது. 2,806 இடங்கள் உள்ளன. 19 வகையான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இவற்றுக்கான இடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது சகோதரருக்கும் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் மூலம் உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடைபயிற்சி

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 8 கி.மீ. தூரம் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நேற்று அதிகாலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்தார். கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உள்ளிட்டோரும் அமைச்சருடன் நடைபயிற்சி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்