முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு

முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2023-08-17 18:45 GMT

முதுமலை: முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலை உள்ளதால் சாலையில் மான்கள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளன. இவைகள் உணவு, நீர் தேடி சாலையை கடந்து செல்கின்றன. அதன்படி கக்கனல்லா சோதனைச்சாவடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதற்கிடையே வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விரட்டிய காட்டுயானை

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொரப்பள்ளியில் இருந்து ஒரு வாகனம் கூடலூரை நோக்கி சென்றது. முதுமலை வனப்பகுதி சாலை வழியாக சென்றபோது சாலையின் ஓரத்தில் ஆண் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது. இதை பார்த்ததும் வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்து செல்போனில் காட்டு யானையை வீடியோ எடுத்தவாறு சென்றனர். இதனை பார்த்த காட்டுயானை திடீரென வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்ட தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகனத்தின் டிரைவர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி இயக்கியபடி ஓட்டி சென்று காட்டுயானையின் தாக்குதலில் இருந்து தப்பித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடவடிக்கை

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், முதுமலை வனப்பகுதி சாலையில் ஆங்காங்கே காட்டு யானைகள் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தைக்கொண்டும் வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. ஆனால் அதையும் மீறி சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க முயன்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்