சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் மீட்பு

சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2022-07-29 15:45 GMT

சதுரகிரி மகாலிங்கம் கோவில்

விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவிழா மற்றும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இங்கு செல்ல தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள உப்புத்துறை வழியாக மலைப்பாதை உள்ளது.

இந்த மலைப்பாதையின் குறுக்கே யானைக்கஜம் ஆறு செல்கிறது. இந்நிலையில் நேற்று  ஆடி அமாவாசையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர். பின்னா் இரவு மீண்டும் உப்புத்துறை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காட்டாற்று வெள்ளம்

அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் யானைகஜம் ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு சென்று திரும்பிய சுமார் 200 பேர் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கிகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளப்பெருக்கு குறையும் வரை யாரும் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், மழை குறையும் வரை பாதுகாப்பான இடங்களில் நிற்குமாறும் மறு கரையில் இருந்த பொதுமக்களுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.

200 பேர் மீட்பு

இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மழை நின்று வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. பின்னர் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் குறுக்கே கயிறுகளை கட்டி 200 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை கோவிலுக்கு பொதுமக்கள் நடந்து செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு பணிகளில் இருந்த வனத்துறையினர் இதனை முழுமையாக செயல்படுத்தாத காரணத்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்