போலீஸ்காரர் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே தன்னுடன் சேர்ந்து வாழக்கோரி, கணவரான போலீஸ்காரர் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே தன்னுடன் சேர்ந்து வாழக்கோரி, கணவரான போலீஸ்காரர் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மனைவி கிருஷ்ணவடிவு. இவர்களுக்கு குமுதா (23) உள்ளிட்ட 2 மகள்களும், முத்துக்குட்டி என்ற மகனும் உண்டு.
முத்துக்குட்டி, மணிமுத்தாறு ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சின்னத்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
புதுமண தம்பதி
குமுதாவுக்கும், பக்கத்து ஊரான ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சுதர்சன் (29) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சுதர்சன், சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பின்னர் புதுமண தம்பதி ராயப்பநாடானூரில் 25 நாட்கள் வசித்தனர்.
வேறு பெண்ணை விரும்புவதாக...
தொடர்ந்து சென்னைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்ற சுதர்சன், அங்கு வாடகை வீடு ஏற்பாடு செய்து விட்டு மனைவி குமுதாவை அழைத்து செல்வதாக கூறி சென்றார். ஆனால், சுதர்சனிடம் இருந்து எந்த தகவலும் வராததால், அவரை மனைவி குமுதா தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது சுதர்சன், மனைவி குமுதாவிடம், 'உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நான் வேறு பெண்ணை விரும்புகிறேன்' என கூறினார். இதுகுறித்து குமுதா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
சேர்ந்து வாழக்கோரி...
இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர், சுதர்சனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுதர்சன், மனைவி குமுதாவுடன் சேர்ந்து வாழ மறுத்து வந்தார். மேலும் அவர் செல்போனில் குமுதாவை அவதூறாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த குமுதா தனது தாயாரின் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுதர்சன் சொந்த ஊரான ராயப்பநாடானூருக்கு வந்திருப்பதாக அறிந்த குமுதா தனது தாயார் கிருஷ்ணவடிவு மற்றும் உறவினர்களுடன் கணவரின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு கணவரின் குடும்பத்தினர் யாரும் இல்லை. வீடு பூட்டிக் கிடந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
உடனே, குமுதா தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, கணவரின் வீட்டு முன்பு தாயாருடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரமாக போராட்டம் நடத்தியும், கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த குமுதா, தாயாருடன் கல்லூரணியில் உள்ள தங்களது வீட்டுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குமுதா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 6 மாதங்களில் குமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
உறவினர்கள் ேபாராட்டம்
இதற்கிடையே, குமுதாவின் உறவினர்கள் நேற்று பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். குமுதாவின் சாவுக்கு காரணமான சுதர்சனை கைது செய்ய வேண்டும், அது வரையிலும் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ்காரருடன் சேர்த்து வைக்கக்கோரி, வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.