தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில்மீனவ பெண்களுக்கு செவுள் வலை வடிவமைத்தல் குறித்து பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் மீனவ பெண்களுக்கு செவுள் வலை வடிவமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில், கல்லூரி வளாகத்தில் மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னுதல் மற்றும் வலை சீர்செய்தல் குறித்த ஒருவார கால இலவச உள்வளாக பயிற்சி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.வ.சுஜாத்குமார் தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் த.ரவிக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ப.மோகன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் நீ.நீதிச்செல்வன் பயிற்சி குறித்து விளக்கினார். மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கேப்டன் செ.விசுவநாதன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலர் இரா.கனகராஜ் ஆகியோர் பேசினர்.
இந்த பயிற்சி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சியில் செவுள் வலைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு முடிச்சுகள், வளைவுகள், கயிறு இணைத்தல் முறை, வலைகளை வடிவமைத்தல், மடங்கு பின்னுதல், வலைவெட்டி சீர்செய்யும் முறைகள், வலைகளை இணைக்கும் முறைகள் மற்றும் மாதிரி செவுள் வலை வடிவமைத்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
முடிவில் மீன்பிடித் தொழில்நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் ச.மாரியப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவிபொறியாளர் அ.அந்தோணி மிக்கேல் பிரகாகர், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் சே.அர்ச்சனா, ஜே.அமலா சஜீவா, த.சுந்தரேசுவரி மற்றும் சூ.ஏமிமா ஆகியோர் செய்து இருந்தனர்.