மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதல்; வாலிபர் பலி

பார்வதிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-12-14 18:45 GMT

திங்கள்சந்தை:

பார்வதிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

நெல்லை வாலிபர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி மதினாநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மதார் முகைதீன். இவருடைய மகன் முகமது ரிக்காஸ் (வயது36). இவர் நாகர்கோவிலில் தங்கி இருந்து ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்பவர்களுக்கு வீடு, வீடாக சென்று சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது ரிக்காஸ் உணவு பொருட்களை சப்ளை செய்து விட்டு தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

பஸ் மோதியது

பார்வதிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அபிலாஸ் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் முகமது ரிக்காசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முகமது ரிக்காஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

டிரைவர் மீது வழக்கு

முகமது ரிக்காஸ் விபத்தில் பலியானது பற்றி அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைகேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து முகமது ரிக்காசின் சகோதரர் முகமது ரியாஸ்(50) இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுற்றுலா பஸ் டிரைவர் அபிலாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்