65 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா; ஆ.ராசா பங்கேற்பு

நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் 65 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழாவில் ஆ.ராசா கலந்து கொண்டார்.

Update: 2023-07-13 20:18 GMT

நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் 65 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழாவில் ஆ.ராசா கலந்து கொண்டார்.

கொடியேற்று விழா

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 65 அடி உயர கொடிக்கம்பம் நிறுவும் விழா நேற்று நடந்தது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு, 65 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடந்தது. தமிழ்துறை தலைவர் மகாதேவன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் பத்ஹூர் ரப்பானி தலைமை தாங்கினார். முதல்வர் அப்துல்காதர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, பெரியாரின் சமூக போக்கை தமிழ் சமூகத்திற்கு தந்தவர் கலைஞர் கருணாநிதி. பாளையங்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வொரு கல்லூரிகளிலும் கலைஞர் நூல்கள் வைப்பதற்கு தனி பிரிவுகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

முன்னதாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், 'பா.ஜ.க.விடம் கொள்கை இல்லை, அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். கொள்கை, சித்தாந்தம் உள்ளிட்டவைகள் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதாவினர் நம்மை கண்டு பயப்படுகிறார்கள்.

பா.ஜனதா ஊழல் மட்டுமல்ல. மதவாதத்தை வைத்தும் அரசியல் செய்கிறது. ஊழல், மதவாதத்துக்கு துணைபோகும் மோடியின் பா.ஜ.க. ஆட்சியை எதிர்கொண்டு அகற்றுவதற்கு மகத்தான ஒரே தலைவர் நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்' என்றார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், 'பா.ஜனதா யாருடன் கூட்டணி வைத்தாலும் தி.மு.க.வை எதுவும் செய்ய முடியாது. 40 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். அண்ணாமலை நடந்தல்ல, உருண்டே வந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது. மக்கள் தி.மு.க பக்கம் உள்ளனர்' என்றார்.

இந்த கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்