வாலிபர் கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-07-20 10:51 GMT

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 56). இவருடைய மகன் காசிராஜன் (36). இவரை குடும்ப பிரச்சினை காரணமாக தூத்துக்குடி மணிநகர் பகுதியில் வைத்து, கொலை செய்ததாக அவரது தந்தை தமிழழகன், உறவினர்கள் தூத்துக்குடி கரிகாலம் காலனியை சேர்ந்த கடல்ராஜா (45), இவரது மகன் அரவிந்த் மற்றும் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் காசித்துரை (31) ஆகிய 4 பேரையும் மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். இந்த 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தமிழழகன், கடல்ராஜா மற்றும் அரவிந்த் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழழகன், கடல்ராஜா, அரவிந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அந்த 3 பேரும் அடைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.

143 பேர்

நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் உள்பட 143 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்