சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.