ஆம்னி பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-24 05:35 GMT

சென்னை,

சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் கோவில்களில் குண்டர்கள்போல எல்.இ.டி. திரைகள் அமைத்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர்.

இன்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செயல்படாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும். தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றதுபோல் செயல்பட வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது, ஆம்னி பஸ்களுக்கு ஏற்றார் போல் கிளாம்பாக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்